ஏற்றுமதிக்கான வர்த்தகரீதியான மரவள்ளி செய்கை.

இயூபோபியேசியே தாவரக் (Euphorbiacea ) குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். இது மனிக்கொட் எஸ்குலாந்தா (Manihot esculanta) எனும் தாவரவியற் பெயரினால் அழைக்கப்படுகின்றது. நிலமட்டத்திலிருந்து 1200 மீற்றர் வரையான உயரமான இடங்களிலும் 25 – 29 C வெப்பநிலையிலும் சிறப்பாக வளரக் கூடியது.
கைத்தொழிற்துறை ரீதியான உற்பத்திகள், உணவுத் தேவை, விலங்குணவு சிற்றுண்டித் தயாரிப்புக்கள் என்பவற்றிலும் உலகளாவிய ரீதியில் பிரதான இடத்தினை வகிக்கிறது. எக்காலத்திலும் பயிரிடக் கூடியதாக உள்ளமையினாலும் நல்ல விளைச்சல் கிடைப்பதனாலும், கேள்வி நுகர்வு காணப்படுவதாலும் இப்பயிரின் உற்பத்தியை எக்காலத்திலும் பெறக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் ஈரவலயத்தில் கம்பஹா,கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகிறது.
தாவரத்தின் உருவவியலும் உடற்றொழியலும்
தண்டுமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. தண்டு முளைக்கும் தன்மையானது இதன் சேமிப்புணவில் தங்கியுள்ளது. முளைகள் தண்டிலிருந்து வளரும்போது அதற்குத் தேவையான உணவு 3 – 4 கிழமைகளுக்கு மட்டும் தண்டிலிருந்து வழங்கப்படுகிறது. பின்பு இலையினூடாக அதன் ஒளித்தொகுப்புச் செயற்பாட்டின் மூலம் கிடைக்கின்றது. தண்டு நடப்பட்டு 3 – 4 நாட்களில் வேர் உண்டாகின்றது.
இங்கு இருவிதமான வேர்கள் உண்டாகின்றன. பக்க வேர், ஆணிவேர் ஆகும். ஆணிவேரிலே உணவு சேமிப்பதன் மூலம் கிழங்காக மாறுகிறது. தண்டுகளில் அரும்புகள் நிலத்திற்கு மேலான கணுக்களிலிருந்து உருவாகும். தாவரம் நடப்பட்டு 25ம் நாள் தொடக்கம் வேரில் உணவு சேமிப்பு நடைபெறத் தொடங்கும். இது 60ம் நாள் மட்டும் விரைவாக நடைபெற்று பின்னர் குறைவடையத் தொடங்கும். உயர்ந்த நீண்ட தண்டு, நீண்ட இலைக்காம்பு என்பன காணப்படும். தண்டின் நிறம் பச்சை தொடக்கம் சிவப்பு கலந்த அல்லது கடும் சிவப்பு வரை மாறுபட்டுக் காணப்படும். இலைகள் யாவும் 5 – 7 வரையான பிரிவுகளைக் கொண்டு காணப்படுவதுடன் இவை வர்க்கத்திற்கேற்ப வேறுபட்டுக் காணப்படும்.
போசணை முக்கியத்துவம் உடையது
கிழங்கு பிரதான சக்தியை வழங்கும் உணவாகும். இதைவிட இதன் இலைகளிலே கூடுதலான விற்றமிகளும் கனிப்பொருட்களும் காணப்படுகின்றன.
நோய்களால் ஏற்படும் சேதம் மிகக் குறைவு
பயிர்ப்பாலனம் இலகுவானது
வளம் குறைந்த மண்ணிலும் ஓப்பீட்டளவில் விளைவு தரும்.
4-6 மாத காலம் வரட்சி காணப்பட்டாலும் அதிகம் பாதிக்கப்படமாட்டாது
பல்வேறு காலநிலைகளுக்கும் பயிர்ச்செய்கை முறைகளுக்கும் ஏற்றது
விசேடமான நுட்பங்கள் எதுவுமின்றி குறைந்த உள்ளீட்டுடன் உற்பத்தி செய்யலாம்.
நீர் குறைவாக உள்ளபோது தாவரம் இலைகளை உதிர்ந்து ஆவியுயிர்பைக் குறைப்பதும் மழை வரும் போது திரும்பவும் இலைகளை உற்பத்தியாக்கி வளர்வதும் இப்பயிரின் சிறப்பம்சமாகும். இது ஒரு குறுகிய நாட் தாவரம். எனவே நாளின் நீளம் (day length) அதிகரித்தால் கிழங்கு உருவாதல் பிந்தும். மரவள்ளிப் பயிர்ச்செய்கைக்கு இருவாட்டி மண் சிறந்தது. எனினும் ஏனைய மண்களிலும் இதனைப் பயிரிடலாம்.
சிபாரிசுசெய்யப்பட்ட வர்க்கங்கள்
பின்வரும் வர்க்கங்கள் பயிர்ச்செய்கைக்குச் சிபாரிசு .
சுரனிமல (BW 1)
இது களுத்துறை மாவட்டத்தில் உகந்தது
ஸ்வர்ணா (BW 2)
ஷானி (BW14)
இது கொழும்பு மாவட்டம்
கிரிகாவடி -6மாதம் பருவகாலங்களில் ஈரவலயத்திலும், நீர்ப்பாசனத்தின் கீழ் உலர் வலயத்திலும்
MU 51 (பேராதனைத் தெரிவு)
பயிரின் வயது 8 -10 மாதம்
ஹெக்டயர் ஒன்றிற்கு 12,300 துண்டங்கள் தேவைப்படும் (90 x 90 ச.மீ இடைவெளி,)
பொதுவாக மழையுடன் நடுவது சிறந்தது.
உலர் வலயத்தில் பெருமழையுடன் அல்லது நீர்ப்பாசனத்துடன் நடலாம்.
ஈரவலயத்தில் வருடம் முழுவதும் நடலாம்.
எனினும் சில இடங்களில் தண்டு கிடையாகவோ அல்லது ஒரு சரிவாக ஒரு கோணத்திலோ நடப்படுகிறது.
இது ஈரவலயமான கம்பஹா, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களில் வீட்டுத் தோட்டங்களிலும் (Back yard crop) பெரியளவிலான தோட்டங்களாகவும் செய்கை பண்ணப்படுகின்றது. இடை வலயமான குருநாகல் மாவட்டத்தில் தென்னை, அன்னாசிப் பயிர்களுடன் கலப்புச் செய்கையாக செய்கை பண்ணப்படுகின்றது. உலர் வலயமான புத்தளம், அநுராதபுரம், அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனாராகலை மாவட்டங்களில் பெரிய அளவில் சேனைப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு கூடுதலான விளைவு பெறப்படுகின்றது.
இங்கு எப்பயிர் செய்கையிலும் தனித்தனியே ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு செயப்பட்டுள்ள அளவு உரக்கலவை பாவித்தல் அவசியம்.
மரவள்ளியின் பொருளாதார முக்கியத்துவம்
நோய் பீடைகளுக்கு எதிர்ப்புள்ள தன்மை.
உயர் விளைவு.
உயர்தரமான கிழங்கு, கூடிய மாப்பொருள், குறைவான நார்.
கூடிய புரதம் கொண்டது.
அதிக வேறுபாடுள்ள காலநிலைகளிலும் பயிரிட முடியும்.
மரவள்ளி உணவுப் பொருட் தயாரிப்புக்கள்
மரவள்ளியில் பிரஸிக்கமிலம் காணப்படுவதனால் புதிய மரவள்ளிக் கிழங்கையே உணவாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மூன்று நாட்களின் பின் இவை நஞ்சாக்கம் அடைந்து விடும். புதிய கிழங்குகளை அவித்தல், பொரித்தல், சுடுதல் ஆகிய முறைகளில் சமைக்கலாம். காய்ந்த மரவள்ளித் துண்டுகளை இடித்து மாவைத் தனியாக அல்லது வேறு மாக்களுடன் கலந்து இடியப்பம், பிட்டு, பூந்தி, பூரி, முறுக்கு, பிஸ்கட், பற்றீஸ்,லேயர்கேக், கொக்கீஸ் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதை விட சவ்வரிசி,மீனுக்கான உணவுப்பொருள் என்பனவும் தயாரிக்கப்படுகின்றன.
உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உற்பத்திகள்
ஒட்டுப்பலகையின் ஒட்டு உற்பத்திப் பொருள், பிரிந்தழியக் கூடிய கொள்கலன்கள், பிசின், மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு மூடிகள், இனிப்பூட்டிகள் (குளுக்கோசு, புரக்ரோசு. ஜாம்), எதனோல் (மதுசாரம்), மொனோசோடியம் குளுட்ராமேற் (வாசனை அதிகரிப்புப் பதார்த்தம்) ஆகியவற்றின் மூலப்பொருட்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இவை உலகளாவிய ரீதியிலேயே முக்கியத்துவம் வாய்ந்தனவாக விளங்குகிறது
கீழே தரப்பட்டுள்ள படங்களுடன் செய்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.
s suthaharan
Western province Department of Agriculture

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram