திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள்.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களால் அறிமுகஞ் செய்யப்பட்ட புதிய அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலாவது விகிதாசாரத் தேர்தல்
1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,52,289 வாக்காளர்களில் 1,06,456 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 69.50 வீதம் ஆகும்.
இத் தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி – ஈ.என்.டி.எல்.எப் ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டாக தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இந்த அணி இரா. சம்பந்தன் தலைமையில் களமிறங்கியது. ஈரோஸ் சுயேட்சைக் குழுவாக வெளிச்சவீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, சிறி லங்கா சுதந்திரக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக் குழு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்
இவற்றில் ஈரோஸ் சுயேட்சைக் குழு 25,229 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களையும், சிறி லங்கா சுதந்திர கட்சி 22,968 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஐக்கிய தேசிய கட்சி 22,450 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றிக் கொண்டன.
17,884 வாக்குகள் பெற்ற சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், 17,755 வாக்குகள் பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவை எந்த ஆசனத்தையும் பெறவில்லை.
ஈரோஸ் சார்பாக சிவப்பிரகாசம் ரட்ணராஜா 784 விருப்பு வாக்குகளும், கோணமலை மாதவராசா 574 விருப்பு வாக்குகளும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகினர். (இந்தத் தேர்தலில் விருப்பு வாக்குகள் அளிப்பதைத் தவிர்த்து வெளிச்சவீட்டுச் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று ஈரோஸ் பரப்புரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.)
ஐ.தே.க. சார்பில் எம்.ஈ.எச். மஹ்ரூப் 10,000 விருப்பு வாக்குகளும், சுதந்திரக் கட்சி சார்பில் சோமதாஸ குணவர்தன 11,260 விருப்பு வாக்குகளும் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டனர்
இந்தியப் படையினரின் முழுமையான ஆதரவோடு இரா சம்பந்தன் தலைமையில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தனும் படுதோல்வி அடைந்திருந்தார்.
முதன்முதலாகப் பொது தேர்தலில் போட்டியிட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூதூர் தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற போதிலும் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைக் கூட வெல்லவில்லை,
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 1,84,090 வாக்காளர்களில் 1,26,624 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 68.78 வீதம் ஆகும்.
இத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் தனியாகவும், ரெலோ, ஈரோஸ், தமிழீழ விடுதலைக் கழகம் – புளொட் ஆகியவை கூட்டாக ரெலோ கட்சியின் வெளிச்சவீட்டுச் சின்னத்திலும், ஈ.பி.ஆர்.எல்.எப். தனியாக மல்லிகைச் சின்னத்திலும் போட்டியிட்டன.
இவை தவிர, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை உட்பட ஏழு அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவுமாக மொத்தம் 56 பேர் போட்டியிட்டனர்.
இவற்றில் ஐக்கிய தேசிய கட்சி 34,986 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 28,380 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும், சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 26,903 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றன.
23,886 வாக்குகள் பெற்ற சிறி லங்கா சுதந்திரக் கட்சி, 3,709 வாக்குகள் பெற்ற ரெலோ மற்றும் 881 வாக்குகள் பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் ஆசனம் எதனையும் பெறவில்லை.
ஐ.தே.க. சார்பில் 17,043 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.ஈ.எச். மஹ்ரூப், 15,084 விருப்பு வாக்குகள் பெற்ற சுனில் சாந்த ரணவீர ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 22,409 விருப்பு வாக்குகள் பெற்ற ஏ. தங்கத்துரை தெரிவு செய்யப்பட்டார். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.எம். நஜீப் 21,590 விருப்பு வாக்குகள் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.
இத் தேர்தலிலும் இரா சம்பந்தன் தோல்வி அடைந்திருந்தார். அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் சிறி லங்கா சுதந்திர கட்சியுடன் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்ட தேர்தல் உடன்படிக்கையில் படி சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் முஸ்லிம் வேட்பாளார் எவரும் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனை இருந்தது. அதனால் சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான ஏ.எம்.எம். நஜீப், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிட நேரிட்டது. இதனால் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தது.
மு.சௌந்தரராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram