கன்னியாவில் சிவனுக்கும் இராவணனுக்கும் திருக்கோவில்.

கன்னியாவில் சிவனுக்கும் இராவணனுக்கும் திருக்கோவில், இராவணேசுவரம் – தென்புலநாதர்.
அருள்மிகு தென்புலநாதர் அருட்கோல இராவணேசுவரம்
கடவுள் மங்கல நன்னீராட்டு அழைப்பிதழ்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே
தகைசால் தவப்பெரியீர்! ஓம் நமசிவாய –
வணக்கம்
இவ்வுலகம் ஐம்பூதக் கலவையால் படைக்கப்பட்டது. ‘நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்பது தொல்காப்பியம். இந்த ஐம்பூதங்களின் உள்நின்று இயக்குபவன் இறைவன் ஆதலால் இறைவனுக்கு இயவுள் என்றும் பெயர். இந்த ஐம்பூதங்களின் கலவை வேறுபாட்டால் இயவுள் கொடுத்த வெந்நீர் ஊற்றுக்களை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பின்வருமாறு மகிழ்ந்து பாடியுள்ளார்
காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று
கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று
தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று
செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று
நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று
நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று
காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று
கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னியாயில்
சிவ பக்தனாகிய இலங்கை வேந்தன் இராவணன் கன்னியாவில் இறைவன் திருவருளால் ஏழு வெந்நீரூற்றுக்களை உருவாக்கினான். தனது தாயாருக்கு வெந்நீரூற்றில் பிதிர்க்கடன் செய்து முடித்தான். இவ்வெந்நீரூற்றானது பாதாள உலகத்திலிருந்து உற்பத்தியாகி வருவதால் குமரி தீர்த்தம் என்றும் கன்னியர் தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டுக் தற்போது கன்னியா ஆயிற்று.
இப்புத்தொழில் கோலத்தில் புத்தெழுச்சி பெற்று இலங்கை சிவபூமியில் திருக்கோணமலை கன்னியா இராவணேசுவரன் தமிழ் வித்தியாலயத்தில் இராவணேசுவரம் தென்புலநாதர் கோவில் அமைகிறது. இங்கே இலங்கை வேந்தன் , சிவபக்தன் இராவணன் தென்புலநாதரை வணங்கும் தவக்கோலமாக காட்சிதருகிறார்.செந்தமிழ் ஆகம முறைப்படி செந்தமிழ் மந்திரங்கள் ஓதி வேள்விகள் ஆற்றிட தென்புல நாதனாகிய சிவனுக்கு மங்கல நன்னீராட்டுப் பெரு விழா நடைபெறவுள்ளது.
வீறியெழல் (சார்வரி) ஆண்டு இரட்டைத் திங்கள் 17ம் நாள் (01.07.2020) புதனன்று எண்ணை சாத்துதல் நடைபெறும்.இரட்டைத் திங்கள் 18ம் நாள் (02.07.2020) வியாழனன்று பனை (அனுசம்) நாண்மீன் பதிற்றிருமைப் பிறைநாள் ( வளர்பிறை துவாதசி) காலை 07.26 தொடக்கம் 08.56 வரையுள்ள பிறைத்தோற்ற வழிபாட்டு நாளில் (பிரதோசம்) கடவுள் மங்கல நன்னீராட்டு நடைபெறும். திருமுறைத் தமிழ்மந்திரத் தேன்பருகி தென்புலநாதரின் செம்மாந்த சிவனாரமுதில் திளைக்க அன்புடன் வேண்டுகிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram