கேட்ட வரம் தரும் கேத்தீச்சரம் !

கேது பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் – ஈழ நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற தலம் –  திருமால், இந்திரன், இராமன், இராவணன், மன்னர்கள் என பலரும் வழிபட்டு வணங்கிய கோயில் –  இலங்கை நாட்டின் பஞ்சேஸ்வரங்களில் முக்கிய தலம் – பாலாவி என்ற பிரம்மாண்ட தீர்த்தம் கொண்ட கோயில் –  இந்திய அரசின்  பொருளுதவியால்  எழும்பும் பழம்பெரும் ஆலயம் – பழங்காலத்தில்  முக்கிய துறைமுகப் பட்டினமாக விளங்கிய தலம் –  மன்னார் மாவட்டத்தில் அமைந்த திருக்கோயில் – நகரத்தாரால் மீட்கப்பட்ட பூமி –  கருங்கல்லில் சுவாமி, அம்பாள், கருவறை அமைந்துள்ள கோயில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட திருக்கோயிலாக விளங்குவது, இலங்கை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேத்தீச்சரம்   திருத்தலம்.               

புராண வரலாறு

இறைவன் திருப்பெயர்  கேதீசரநாதர்.  தன்னை வணங்கும் அடியாரின் பெயரால் தன் பெயரை  அன்புடன் ஏற்றுக் கொள்ளும் இறைவன், கேது வழிபட்டுப் பேறுபெற்றதைப் பெருமைப்படுத்தும் விதமாக  கேதீசரர் ஆனார்.

மகாதுவட்டா என்ற தேவதச்சன் வணங்கி திருப்பணி செய்ததால் இத்தலம்  மகாதுவட்டாபுரம் என்றும் வழங்கலானது. மகாதுவட்டா இராமருக்கு முற்பட்டவராகக் கருதப்படுவதால் இது இராமேஸ்வரத்திற்கும்  முன் தோன்றிய கோயிலாகப் போற்றப்படுகிறது.

கயிலை மலையில் வாழும் கேதாரநாதருக்கு இவருக்கும் தொடர்புண்டு என்ற கூறுவோரும் உண்டு.  இதனைத் திருநாவுக்கரசரின்   “கேதீச்சரமேவினார்  கேதாரத்தார்”  என்ற வரிகள் உறுதி செய்கின்றன.

தொன்மைச் சிறப்பு

கி.பி. ஆறாம் நூற்றாண்டு கலிங்கநாட்டு இளவரசன் விஜயன் என்பவன் காலத்தில் இத்தலம் சிறப்பு பெற்று விளங்கியதை வரலாறு  எடுத்துக் காட்டுகிறது. பழங்காலத்தில் திருகேதீச்சரம் இரட்டை அகழியால் சூழப்பெற்று, 1120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது.

போர்த்துக்கீசர்கள்    காலத்தில் இவ்வாலயம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு, இதன் சொத்துக்கள்  கொள்ளையிடப்பட்டதை வரலாறு கூறுகிறது.  இங்கே தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட  ரோம, அரேபிய, எகிப்திய,  இந்திய   நாணயங்கள் மற்றும் சீனக் களிமண் பொருட்கள், இந்நகரின் தொன்மையைச் சிறப்புக்களையும் நமக்கு உணர்த்துகிறது.

மேலும், இந்நகரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியதையும்,  காந்தக்கோட்டை இருந்ததையும் அறிய முடிகிறது. மேலும்,  “வங்கம் மலிகின்ற கடல்” என்ற  சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல் வரிகள், இங்கே கப்பல்கள் அதிகம் வந்து சென்றதைக் குறிப்பிடுகிறது.   பெரிய மாடவீதிகள் கொண்டு விளங்கியதை இங்கு கிடைத்த  தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன.  இத்தலத்தின் அருகேயுள்ள மாளிகைத்திடல் என்ற ஊரும், அங்கே கிடைத்த சோழர்காலக் கல்வெட்டும், இதனை உறுதி செய்கிறது. (இது தற்போது கொழும்பு அருங்காட்சியத்தில் உள்ளது.)  மேலும், பார்ப்பனர்கள்  இருந்ததை குறிக்கும் விதமாக  பாப்பாமோட்டை, வேட்டைத் திருவிழா நடந்ததை குறிக்கும் விதமாக,  வேட்டையா முறிப்பு போன்ற இடங்களும்,  இன்றும் சான்றாக அமைந்துள்ளன.

கி.பி.1545 இல்   கடல் சீற்றத்தினால் மாதோட்டத்தின் சில பகுதிகள்  கடலில் மூழ்கின.  கி.பி.1585இல்  மன்னாரில் வந்திறங்கிய போர்த்துக்கீசர்கள்  இந்து ஆலயங்களில் உள்ள பொன் பொருளைக் கொள்ளையடித்தனர்.  திருக்கோயில்களைத் தகர்த்தனர்.   அந்த வகையில் திருக்கேதீச்சரம் கோயில் பொருள்களை  சூறையாடி,  ஈவு இரக்கமின்றி  பீரங்கியால் தகர்த்தனர். இக்கோயில் கற்களைக் கொண்டு மன்னார்க்கோட்டை,  கிருஸ்துவ தேவாலயம்  அமைத்தனர். கி.பி. 1903 வரை இருண்ட காலமாக இருந்தது. கி.பி.1872இல் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர்   இவ்வாலயம் பற்றி சிறு குறிப்புகள் மூலம் சைவ சமய மக்களுக்கு நினைபடுத்தி,  இதனை பெருமைகளை எடுத்துக்கூறினார். அவரின்  முயற்சியில் அவரது காலத்திற்குப் பின்பு  21 ஆண்டுகள் கழித்து திருப்பணி  கைகூடியது.

கொழும்பில் வணிகம் செய்து வந்த நகரத்தார், முன் முயற்சி செய்து யாழ்ப்பாணத்து அன்பர்கள் ஆதரவோடு 43 ஏக்கர் நிலப்பரப்பை ரூ. 3100/-க்கு  அரசிடம் இருந்து ஏலத்தில் எடுத்தனர். அதன்மூலம் ஆறுமுக நாவலரின் கனவு நனவானது.

சிவபாதசுந்தரம் அவர்கள், சீமான் கந்தையா வைத்தியநாதன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பெருமுயற்சியால், புதையுண்ட விநாயகர், மகாலிங்கம்,  சுப்பிரமணியர், நடராசர், சண்டிகேசுவரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, கி.பி. 1960ல் குடமுழுக்கு நடந்தேறியது. ஆலயத்தை அரசால்  அங்கீகரிக்கப்பட்ட ஆலயமாக்கிய பெருமை  கந்தையா வைத்தியநாதன் அவர்களையே சாரும்.  1976 இல் குடமுழுக்கு நடந்தேறியது. 1983 இல் ஐந்து தேர்கள் வீதியுலா வந்தன.

இந்நிலையில், இலங்கை உள்நாட்டுப் போரினால் 1990 முதல்  2003 வரை இத்திருக்கோயில் மீண்டும் பாதிப்பை  சந்தித்தது.  இதன்பின் 2003ஆம் ஆண்டு திருப்பணி சபையின் பெரும் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக,  இந்திய அரசு  325 மில்லியன் ரூபாயை  மான்யமாக அளித்து திருப்பணிக்குப் பேருதவி புரிந்துள்ளது.  தமிழகத்து ஸ்தபதிகள் இப்பணியினைச் செய்து முடித்துள்ளனர்.  தற்சமயம் சிவன், அம்மன் கருவறை விமானங்கள் மற்றும் சுற்றுப் பிரகார சன்னதிகள், செதுக்கப்பட்ட கருங்கல்லினால் இந்திய ஸ்தபதிகளால் செய்யப்பட்டு வருகிறது.  இரண்டாம் கட்டத் திருப்பணிக்கு நிதி வேண்டப்படுகிறது.  விரும்பும் அடியார்கள் உதவிபுரியலாம்.

தேவாரப் பாடல்பெற்ற தலம்

ஈழ நாட்டின்  தேவாரப் பாடல்பெற்ற தலங்களாக,  திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம்,  ஆகியவை  விளங்குகின்றன.         இதில் திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும்  பதிகம்  பெற்ற  தலமாக விளங்குகின்றது ,

திருஞானசம்பந்தர் தேவாரத்தில்,

மாதோட்டங் கருத நின்ற

கேதீச்சரங் கைதொழக் கடுவினையடையாவே –

இத்தலம் தீவினைகள் அகற்ற வல்லதாக உறுதி கூறுகின்றார், திருஞானசம்பந்தர்.       இதே கருத்தினை, சுந்தரரும் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கறையார் கடல் கூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள்

சிறையார் பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை

மறையார்புக மூரன்னடித் தொண்டன்னுரை செய்

குறையாத் தமிழ் பத்துஞ்சொல்லக் கூடாகொடு வினையே .

இது தவிர,     “கேதீச்சரமேவினார்  கேதாரத்தார்”  என   திருநாவுக்கரசர் பாடிப் பரவியுள்ளார். சேக்கிழரின் பெரியபுhணத்திலும் இத்தலம் புகழப்பட்டுள்ளது.

   நன்னகர் மாந்தை  முற்றத்து ஒன்னார்

        பணிதிறை  கொணர்ந்த பாடுயர் நன்னகர் –  அகநானூறு

புன்னாகச் சோலை புனற்றெங்கு  சூழ்மாந்தை – முத்தொள்ளாயிரம்

மா சந்தையாக (பெரிய சந்தை) விளங்கிய இப்பகுதி, மாசந்தை  மருவி  மாந்தையானது.  சங்ககால,, பல்லவர் கால இலக்கியங்களிலும் இத்தலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

இத்தலம் குறித்து, கந்தபுராணம் மற்றும் தக்ஷிண  கைலாச மான்மியம் என்ற  சமஸ்கிருத நூலிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.

வழிபட்டுப் பேறு பெற்றவர்கள்

திருமால்,   பிரம்மன்,  இந்திரன்,  தேவர்கள், கந்தர்வர்கள்,  வித்யாதரர், கின்னரர், கேது பகவான், துவட்டா, இராமபிரான், அகத்தியர், இராவணன், மாலியவான், அர்ச்சுனன் முதலோனோர் வழிபட்டுப் பேறுபெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

ஆலய அமைப்பு

கிழக்குநோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகளைக்கொண்டு எழிலாக அமைந்துள்ளது. அருகே  காண்டாமணியும்,  மண்டபமும் அமைந்துள்ளன.

எதிரில் நந்திதேவர் மண்டபத்தினுள் சுவாமி தரிசனம் செய்தபடி அமர்ந்துள்ளார். உள்ளே மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்க,  கருவறையில் மூலவர் திருக்கேதீசரநாதர் குடிகொண்டுள்ளார். இவர் கி.பி. 1903இல்  காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட திருமேனி ஆவார்.   தற்போது  ஆலயத்தில்  சுற்றுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம்  தோண்டும் போது கிடைத்த,  சிறிது பின்னப்பட்ட திருமேனியாகும்.  இவர், பழைய மூலவராக இருக்கக்கூடும்.

கருவறையைச் சுற்றி விநாயகர்,  தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அமைந்துள்ளனர். இதேபோல,  அன்னை கௌரியம்பாள்  சிலையும் உருவாக்கப்பட்டு  தென்திசை நோக்கி  பழைய நிலையிலேயே நிறுவப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன், சண்டேசுவரர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், கேது பகவான், சமயக்குரவர், சேக்கிழார், சந்தானக்குரவர், சுந்தரர் மற்றும் மேற்கு பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், மகாவிஷ்ணு, தோண்டிய போது கிடைத்த மகாலஷ்மி,  பஞ்சலிங்கம், மகாலிங்கம்,  சுப்பிரமணியர் ஆகியோர் திருவுருவங்கள் தனித் தனியே நிறுவப்பட்டுள்ளன.  இது தவிர, வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான்,  சோமாஸ்கந்தர், பள்ளியறை,  கிழக்குப் பிராகாரத்தில் கருவூலம், யாகசாலை, பைரவர் சன்னதி,  கிழக்குப் பிரகாரத்தில் யாகசாலை,  பைரவர் சந்நதி ஆகியவை அமைந்துள்ளன.

ஆலயத்தின் வெளியே பிரம்மாண்ட திருஞானசம்பந்தர்- சுந்தரர் மடம்  கலைநயத்துடன் புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இதில்  தங்குமிடம், அன்னதானக் கூடம் என அனைத்தும்  உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்

ஆலய நிர்வாகம் திருக்கேதீசரம் அறங்காவலர் குழுவினரால்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதில் நன்றி கூறும் விதமாக, நகரத்தார் இருவர், நிரந்தர அறங்காவலர்களாக உள்ளனர். இதன் தலைவராக மாணிக்கம் தவயோகராஜா   உள்ளார். இதேபோல,  திருப்பணிக்குழு தனியே திருப்பணிகளை நடத்தி வருகின்றது. இதன் தலைவராக செல்வரத்தினம் இராகவன், செயலராக  சிவசம்பு இராமகிருஷ்ணன்  உள்ளனர்.

தரிசன நேரம்

காலை 7.00  மணி முதல்  பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல்  இரவு 7.00 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.  என்றாலும்,  திருப்பணி நடைபெற்று வருவதால், பாலாலயம் செய்துள்ள திருமேனிகளுக்கு,   காலை  7 மணி, பகல் 12 மணி, மாலை 5.30 மணிக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்

இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம்,  மன்னார் மாவட்டத்தில், மன்னார்  நகரில் இருந்து கிழக்கே,  யாழ்ப்பாணம் செல்லும் பிரதான சாலையில் , 10 கி.மீ. தொலைவில்  திருக்கேதீச்சரம்  எனும் தேவாரத் தலம் அமைந்துள்ளது.  கொழும்பில் இருந்து  வடக்கே 320 கி.மீ. , யாழ்ப்பாணத்தில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

பெட்டிச்செய்தி-1

தக்ஷிண  கைலாச மான்மியம்

இத்தலத்தின் பெருமையை இறைவன்  புகழ்பாடும்   “தக்ஷிண கைலாச மான்மியம்”  என்ற சமஸ்கிருத நூல் குறிப்பிட்டுள்ளது. இதன் இரண்டாம் அத்தியாயத்தில்,  திருக்கேதீச்சர மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது. இதனை  சூதமுனிவர்,  நைமிசாரண்யத்தில்  வசிப்பவரிடம் கூறினார் என மான்மியத்தில்  கூறப்பட்டுள்ளது.

வாயுபகவான், தன்னோடு போர் செய்த ஆதிசேஷன் ஆயிரம் படங்களினால்  மகாமேரு மலையை மறைத்தான்.  என்றாலும், ஆதிசேஷனை விலக்கி, மகாமேருவின் மூன்று  சிகரங்களை  பிடுங்கினார், வாயுபகவான்.  அதில் ஒரு சிகரத்தை திரிகூடாத்திரியாகவும், இரண்டாவது சிகரத்தை கேதீச்சரமாகவும் மூன்றாவது  சிகரத்தை கந்தமாதன மலையாகவும் நிறுவினார் என கூறப்பட்டுள்ளது.

கேத்தீச்சரத்தில் உள்ள பாலாவி  தீர்த்தத்தில் நீராடி,  கேத்தீச்சரனை  வணங்கினால்  தீராத பாவங்கள் தீரும் என்றும் கூறப்பட்டுள்ளது.  கேத்தீச்சரம்  தலத்தை ஒத்த தலம் முன்னேயும் உருவாகவில்லை,  இனிமேலும் உருவாகாது என  புகழப்பட்டுள்ளது.  அத்துணை சிறப்பு வாய்ந்த தலமாக இது திகழ்கிறது.

பெட்டிச்செய்தி-2

பாலாவித் தீர்த்தம்

இத்தலத்தின் தீர்த்தமாக, மிகப்பெரிய பாலாவித் தீர்த்தம்  அமைந்துள்ளது. சுந்தரரின் தேவாரத்திலும்,  இப்பாலாவி தீர்த்தம் குறித்து பாடியுள்ளது,  இதன் பெருமையை உணர்த்துகிறது. தமது பதினொரு பாடல்களில், பத்து பாடல்களில் “பாலாவியின் கரைமேல்”  என இத்தீர்த்தத்தைப் புகழ்கின்றார். பழங்காலத்தில், பாலாவி ஆற்றின் முகத்துவாரத்தில்  திருக்கேதீச்சரம் இருந்துள்ளது. அந்த ஆறே, இன்று திருக்குளமாக உருமாற்றம் பெற்றுள்ளதை வரலாறு கூறுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram