திருப்பங்கள் தரும் திருக்கோணேஸ்வரர்!

தென்கயிலாயம்  எனப் போற்றப்படும் திருத்தலம் – வாயுவால் பிடுங்கப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை –  அகத்தியர் தவமியற்றிய பூமி- கந்தகத்தன்மை கொண்ட மலை – புராணங்களும்,  கல்வெட்டுகளும், இலக்கியங்களும் புகழும் தலம் –  திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத்தலம்  – திருப்புகழ் பாடல்பெற்ற கோயில் –  இராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற  கோயில் –  குளக்கோட்டு மன்னனால் திருப்பணி முடித்த தலம் –  17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் அழிக்கப்பட்டு,  1963ல் மீண்டும் உருவான திருக்கோயில்-   இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் -புகழ்பெற்ற  இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் எனப் பல்வேறு  பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள,  திருக்கோணேஸ்வரம்   திருக்கோயில்.

இத்தலம் மிகவும்  தொன்மையானது என்பதற்கு  இத்தலம் குறித்து கிடைத்துள்ள புராணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் உள்ளிட்டவை சான்றாக அமைந்துள்ளன. ஈழம் எனப்படும்  இலங்கையில்,  தேவாரப்பாடல் பெற்ற தலங்கள், கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும்,  மேற்கு கரையில் உள்ள திருக்கேதீசுவரமும் ஆகும்.இதில் திருகோணேஸ்வரத்தின் காலத்தை கி.மு.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது  என  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.மனுநீதி கண்ட சோழனே இத் திருக்கோயிலைக் கட்டினான் எனக் கூறப்படுகிறது.   இவனது மகன்  குளக்கோட்டு மகாராஜன் தன் தந்தை விட்டுச் சென்ற கோயிலின் திருப்பணியை  செவ்வனே செய்து முடித்துள்ளான்.

சிவபெருமானின் பூர்வீகத் தலமாகிய  கைலாச மலையின்  தென்பகுதியில்  சற்றும் பிசகாத  நேர்கோட்டிலே திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதாலும், தெட்சண கைலாசம்(தென் கைலாசம் ) எனப் பெயர் பெற்று விளங்குகின்றது. ஆதியில் இத்திருக்கோயில்  திருவீதிகள்,  மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்கிலேய வரலாற்று அறிஞர் குறாகு யெறசோ  இத்தலம் பற்றி  விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராவணின் தாய்  தன் தலைநகரான  இலங்காபுரியில் இருந்து நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டு சென்றாள்.  அன்னையின் பக்தியை  உணர்ந்த இராவணன், தன் தாயின் சிரமத்தைப் போக்க திருகோணேஸ்வர மலையையே வெட்டி  பிளக்க முயன்றான். ஆனால் அது இயலவில்லைஎன தலபுராணம் கூறுகிறது.

மற்றொரு கதை. இராவணன்  சிவலிங்க  ஒன்றைப் பெறுவதற்கு தெட்சண கயிலாயம் எனப்படும் திருக்கோணஸ்வரம் வந்து  இறைவனை வணங்கி நின்றான்.  உடனே இறைவன் காட்சிதராததால் கோபம் கொண்ட இராவணன், மலையைப் பெயர்த்திட, மலையைத் தன் வாளால் ஓங்கி வெட்டினான்.  அச்செயலால்  தண்டிக்கப்பட்ட சிவபக்தனான இராவணன் தன் பத்து தலைகளில் ஒன்றையும், தசைநார்களையும், கையையும், விரல்களையும் கொண்டு வீணை இசைத்தான். சாமவேத கானம்பாடி, தன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான்.   மனமிரங்கிய கோணேஸ்வரர், ஒரு சிவலிங்கத்தைத்   தந்தருளினார் என்பது தலவரலாறு. இம்மலையில், இராவணன் தன் வாளால் வெட்டிய இடமே இராவணன் வெட்டு என வழங்கப்படுகிறது. இராவணன்  வெட்டிய வடுவை, இன்றும் இம்மலையில் காணலாம்.

கஜபாகு மன்னன்

திருகோணமலை திருக்கோயிலின் அமைப்பினால் கவரப்பட்ட இலங்கை மன்னன்  கஜபாகு  என்ற பௌத்தமன்னன் சிவன் கோயிலை இடித்து,  பௌத்த ஆலயம் எழுப்ப முடிவு செய்து திருகோணமலை அருகே முகாமிட்டிருந்தான்.  அன்று இரவு அவனின் கண்பார்வை பறிபோனது.  பயந்துபோன அவனுக்கு மறுநாள் ஆலய  அர்ச்சகர்கள் திருநீறு இட்டு  முடித்தவுடன் மீண்டும் மன்னனுக்குப் பார்வை கிடைத்தது. இறைவனின் பெருமையை உணர்ந்த மன்னன், கோயிலை இடிப்பதற்கு மாறாக, கூடுதல் திருப்பணி செய்து  நன்றி தெரிவித்தான்.   அவன் நீராடிய தீர்த்தம்  கண்தழை என்ற பெயரில் வழங்கப்பட்டது.

போர்ச்சுக்கீசியரின் அராஜகம்

இந்நிலையில் இப்பகுதியில் ஆட்சி செய்த  போர்ச்சுக்கீசிய தளபதி  கொன்ஸ் தந்தைன் டீசா என்பவன் கி.பி. 1624ஆம் ஆண்டு  இத்திருக்கோயிலின் பெருமைகளை அறிந்து அதனை அழித்து, செல்வங்களை  கொள்ளையிடத் திட்டமிட்டான்.  இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட அந்தணர்களும், அடியார்களும்  மூலவர் சிலைகள், உற்சவமூர்த்திகள் இவற்றை ஆலயம் அடிவாரத்தில் உள்ள  தம்பலகாமத்தில்  மறைத்து வைத்து  அங்கேயே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இது இன்றும் ஆதி திருக்கோணேஸ்வரமாகப் போற்றப்படுகிறது.

இதன் பின்பு வந்த  போர்ச்சுக்கீசிய தளபதி டீசா என்பவன் திருக்கோணேஸ்வரம் அமைந்திருந்த  மலை ,மலை நடுப்பகுதியில் இருந்த மாதுமை அம்மன்  கோயில், மலை அடிவாரத்தில் இருந்த விஷ்ணு கோயில்  என மூன்று கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான்.   செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தான்.  இடித்த கற்களைக்கொண்டு இம்மலையில்  ஓர் கோட்டையை அமைத்தான் என்பது வரலாறு. அதுவே இப்போது பிரட்றிக் கோட்டை என அழைக்கப்படுகிறது.

திருவுருவங்கள் கிடைத்தன

1950இல்  திருகோணமலை  நகராண்மைக் கழகத்தால் நகர எல்லையில் ஓரிடத்தில்  கிணறு தோண்டும் போது,  நான்கடி ஆழத்தில்  சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சோழர் காலத்து  தெய்வ வடிவங்கள் கிடைத்தன.  இதன்பின்  கி.பி. 1963ஆம் ஆண்டில் புதிய  சிவாலயம் எழுப்பப்பட

கொணா- மாடு, கணா -காது,  காதுகளுடைய மாடு என்பது  காளையைக் குறிக்கும் சிங்களச் சொல்லாகும்.   கொணாகணா என்பதே கோகண்ணம் என்றாகி,  மருவி  கோகர்ணமானது.

தேவாரத் தலம்

இத்தலம் திருஞானசம்பந்தரால்  பாடல்பெற்ற  இரண்டு   தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

தாயினு நல்ல தலைவரென் றடியார்

தம்மடி போற்றிசைப் பார்கள்

வாயினு மனத்து மருவிநின் றகலா

மாண்பினர் காண்பல வேடர்

நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி

நுழைதரு  நுhலினர் ஞாலங்

கோயிலுஞ சுனையுங் கடலுடன் சூழ்ந்த

கோணமா மலையமர்ந் தாரே  –

கடல் சூழ்ந்த மலையில் அமர்ந்த இறைவன் எனப் புகழ்கின்றார், திருஞானசம்பந்தர்.

திருப்புகழில், ...நிலைக்கு நான்மறை  தவத்தான

பூசுரர் திருக்கோணாமலைத்   தலத்தாறு  கோபுரம்

என  அருணகிரிநாதர்  புகழ்கின்றார்.

வரலாற்றுச் சான்றுகள்

ஆறாம் நூற்றாண்டின் மகாவம்சம்,  திருஞானசம்பந்தர் தேவாரம்,  அருணகிரிநாதர் திருப்புகழ்,  இலங்கையின் உலகாயுத ஆன்மிக ஆட்சி,  இலங்கையின்  கோணேசர் கல்வெட்டு,  தஷிண கைலாச புராணம்,  யாழ்ப்பாண வைபவ மாலை, மச்சபுராணம்,  திருக்கோணாசல புராணம், பெரிய வழமைப் பத்ததி,   திருக்கரசைப் புராணம்,  கோணாமலை அந்தாதி,குளக்கோட்டன் கம்ப சாத்திரம், கோணேசர் ஆற்றுப்படை, கோணாசல வெண்பா, திருக்கோணாசல வெண்பா,  திருக்கோணாசல வைபவம், ஈழமண்டலச் சதகம்,  கோட்டைக் கல்வெட்டு,  குச்சவெளி, வெருகல்,கங்குவேலி,  திரியாய்,பெரியகுளம், பளமோட்டை கல்வெட்டுகள் என  பல்வேறு  கணக்கிலடங்காத சான்றுகள்  அமைந்த திருத்தலம்.

தமிழ்நாட்டில்  குடுமியான்  மலையில் அமைந்துள்ள கல்வெட்டில், சடையவர்மன் வீரபாண்டியன், சிங்கள அரசனான, முதலாம் புவனேகுபாகுவை அடக்கி  திருக்கோணமலையில் தன் கயல் கொடியை 13ஆம் நூற்றாண்டில்  பொறித்தான் என சாசனம் கூறுகிறது.

இலக்கியங்கள்

தேவாரம், திருப்புகழ், பெரியபுராணம்,  கந்தபுராணம்,  சிவநாமக் கலிவெண்பா,  செவ்வந்திபுராணம்,  வாயு புராணம்,  இலங்கா தீபக தீபம்,  திருக்கோணசலப் பதிகம் ஆகியவை  முக்கியமானவையாகத் திகழ்கின்றன.          இவை தவிர,  வடமொழியில்  சாந்தோகிய  உபநிடதம்,  ஸ்கந்தபுராணம் ஆகியவையும் ஆங்கில வரலாற்று ஆவணங்களும் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

தெட்சண கயிலாயம்

ஆதிசேஷனுக்கும்,  வாயுவுக்கும்  ஏற்பட்ட மோதலில்  வாயுபகவான் தன் காற்றின் பலத்தால், மூன்று சிகரங்களைப் பிடுங்கினார். அதில் ஒன்று  திருக்கோணேஸ்வரமாக மாறியதாக,“தக்ஷிணகயிலாய மான்மியம்” கூறுகிறது.திருகோணமலையின் மண்வளம் கந்தக சக்தி கொண்டதென  ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதே தன்மை கொண்டதாக திருச்சிராப்பள்ளி, திருக்காளத்தி மலைகள் உள்ளதெனவும் கூறப்படுகிறது.

மேலும், தென்இந்தியாவின் தென்முனையில் உள்ள திருகோணமலை தென் கயிலாயமாகப் போற்றப்படுகின்றது. இங்கே அகத்தியர் வழிபட்டுப் பேறுபெற்றதாகத் தலபுராணம் குறிப்பிடுகிறது.

ஆலய அமைப்பு

மூன்றுபுறம்  இந்து மகாசமுத்திரம்  சூழ்ந்திருக்க , உயரமான மலை உச்சியில்,  திருக்கோணேசர்  திருக்கோயில் அமைந்துள்ளது.  மலையேற எளிதான பாதை, வாகனங்கள்  சென்றுவரவும் நல்ல வசதி உள்ளது.

ஆலயத்தில் வலதுபுறம் பிரம்மாண்ட சுதை வடிவ சிவபெருமான்  நம்மை வரவேற்க, கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம் கடலை நோக்கி காட்சி தருகின்றது.

உள்ளே மகாமண்டபம்,  கருவறை முன்மண்டபத்தில் அடுத்து மூலவர்  கோணேச்வரர் அருள்காட்சி வழங்குகிறது. எதிரில் தெற்குமுகமாய் மாதுமைநாயகி எளிய வடிவில் அருள்வழங்குகின்றாள்.

கருவறை வெளிபிராகாரத்தில், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான்,  தலமரம்,  உற்சவர் சபை காட்சிதருகிறது.  ஆலயத்தில் கருவறை விமானத்தில் பத்துதலை  ராவணன் எழிலாக காட்சி தருகின்றார். ஆலயச் சுவர்களில் தலம்  தொடர்பான பதிகங்கள், திருப்புகழ்,  பட்டினத்தார் பாடல்கள்  நிறைந்துள்ளன.

திருக்கோணமலை மாவட்டம் முழுமையுமே “கோணேசர் பூமி”  என அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆலயத்தின் வெளியே,  கோபுரத்திற்கு  எதிரே,  இராவணன் சிலை கோயில்  வணங்கியபடி நிற்கிறது. அங்கிருந்து  கடல் காட்சி நம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.

இறைவன், இறைவி

இறைவன் திருக்கோணேஸ்வரர்,  கிழக்கு முகமாய், மலையின் உச்சியில் அமைந்து, கோயில்  கருவறையில் எழிலான காட்சி தருகின்றார். திருவிளையாடல்கள் புரிந்த இறைவனைப் பல்வேறு கயவர்களின் திருவிளையாடல்களையும் வென்று, நிலைத்த இடம் பிடித்துள்ளார் என்ற வரலாறு, சுவாமியைத் தரிசிக்கும் போது நாம் கண்முன் நிழலாடுகிறது.துன்பங்களுக்கே துன்பம் தந்து, அடியார்களின் துயர்தீர்ப்பவர் இவர் என்ற  எண்ணம்  மேலோங்குகிறது.  மாதுமை அம்மாள், தென்முகமாக, எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். மாதுமை அம்பாளை சங்கரிதேவி எனவும்,  திருக்கோணேஸ்வரத்தை  18 மகா சக்தி பீடங்களில் ஒன்று எனவும் கொண்டு,  மாதந்தோறும்  இந்தியாவிலிருந்து அடியார்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.

கல்தூண் கல்வெட்டு

கோட்டை வாயிலில் உள்ள தூண் கல்வெட்டு ஒன்று, இக்கோயிலில் எதிர்காலத்தைக் கணித்திருப்பது வியப்பான ஒன்றாகும்.

முன்னே குளக்கோட்டன் மூட்டும்  திருப்பணியைப்

பின்னேபறங்கி பிடிக்கவே…..

...மன்னவபின்

பொண்ணாத தனை யியற்ற வழித்தேவைத்து

எண்ணார் பின்னரசர்கள்   என்பது அதன் வரிகள்.

இதன் பொருள் :  குளக்கோட்ட மன்னன் திருப்பணியால் அமைந்த திருக்கோயிலைப் பறங்கியர்  உடைப்பார்கள். பின்பு மன்னர்கள் இதனைப் பராமரிக்க மாட்டார்கள் என்ற வாக்கின்படி,  அனைத்தும் நடந்து முடிந்துள்ளது.  இது நமக்கு மிகவும் வியப்பைத் தருகிறது.

தலவிருட்சம், தீர்த்தம்

தலவிருட்சம்   கல்லாலமரம்.  தலத்தீர்த்தம்  பாபநாசம்  தீர்த்தம்

ஆகும்.

விழாக்கள்

இவ்வாலய விழாக்கள் அனைத்தும்  சிறப்போடு நடத்தப்பட்டு வருகின்றன.  என்றாலும் பங்குனி  உத்திரத்தில் கொடியேற்றம் செய்து 18 நாட்கள்  பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது.   சிவராத்திரியில் திருக்கோணேசப் பெருமான்  திருகோணமலை நகரில் 5 நாட்கள் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசையில் சுவாமி கடலில் நீராடும் போது திருகோணமலை நகரில் உள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் தீர்த்தமாட வருவது சிறப்பு.

தரிசன நேரம்

காலை 6.30 மணி முதல்  பிற்பகல் 1.00  மாலை 4.00 முதல் இரவு 7.00 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

நிர்வாகம்

திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை, கோயில் நிர்வாகத்தினைக் கவனித்து வருகிறது.

அமைவிடம்

இலங்கையின்  கிழக்கு கடற்கரைப் பகுதியில்  அமைந்துள்ள புகழ்பெற்ற  இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் திருகோணமலை.  கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில்  இந்நகரம் அமைந்துள்ளது.  இலங்கையின் பெரிய  நதியான மகாவலி கங்கை, இங்குதான் கடலுடன் கலக்கிறது.  இம்மலை இலங்கையின் சுவாமிலையாக  போற்றப்படுகிறது. கொழும்பில்  இருந்து வடகிழக்கே  303 கி.மீ., யாழ்ப்பாணத்தில்  இருந்து தென்கிழக்கே 232  கி.மீ., தொலைவில்  திருக்கோணமலை அமைந்துள்ளது.

PANAYAPURAM ATHIYAMAN ARTICLES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram