தென்திருமலை தேசம்

ஈழத்தின் கீழைக்கரையின்
நாழமாய் நீண்டு தொடரும்
எண்ணரிய எங்களின் வரலாற்றின் பிறப்பிடமாய்
வற்றாத வழிபாட்டின் ஊற்றிடமாய் தென் திருமலை தேசம்

ஆழியலை மெல்ல வந்து முத்தமிடும்
அருகே பச்சை வயல் படர்ந்திருக்கும்
கருமை குன்றுகளை சூழ்ந்திருக்கும்
எங்கள் நிலமோ அகன்று விரிந்திருக்கும்

இந்தப் பெரு நிலமெல்லாம் தனதென்று
பிடியன்னமென்னடையாளோடுறையும் கோணேஸ்வரனே
எங்களின் இருப்பிரும் வரை இறையாய்
இருந்திங்கு ஆண்டருள் புரிந்திடுவான்

நாங்கள் வாழுமிடம் இது நகரின் வாழிடம்
மாவலி எனும் மாதொருத்தி வந்திங்கு போனதனால்
செந்நெல் விளைந்திருக்கும் அருகே மலர்களின் வாய்களில் தேனொழுகும் தீங்கனிகள் நாவை சுவையாக்கும் ஆனால்
எங்கள் கைகளெல்லாம் கோணமலையானையே தொழுதிருக்கும்

கூட்டமாய் குடிகள் எல்லாம் நிறைந்திருக்கும் அவை
எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்
குளக்கோட்டன் கொணர்ந்திருங்கு பதியமைத்தானென்று
பாட்டு வரியாய் கோணேசர் கல்வெட்டில் பூத்திருக்கும்

இயக்கர் வழிகளாய் இளக்கந்தை முதல் வெருகல் வரை
ஆதியாய் அமைந்த குடிகள் எல்லாம் அங்கங்கே
அணி அணியாய் இந் நிலத்தை சார்ந்திருக்கும்

குளக்கோட்டன் முதல் இளஞ்சிங்கன் வரை
எம்தனை ஆண்ட அத்தனை பேரும் ஆக்கிய
சான்றுகள் யாவும் எங்களின் நிலம் எங்கனும்
கல்லில் பொறித்த எழுத்துக்களாய் எங்களை சார்ந்திருக்கும்

தேசம் எங்கும் தேவர் படை தலைவன் வேலிருக்கும்
அருகங்கே ஆண்டவன் சிவனின் லிங்கவுரு நிமிர்ந்திருக்கும்
தாய்தெய்வ வழிபாடு தனையர்களின் வீடுகள் தோறும் நிகழ்ந்திருக்கும்
இங்கு பாம்பு வழிபாடும் நிறைந்திருக்கும்

காட்டுத்தேங்காய் மர நிழலில் காளியவள் கொலுவிருக்கும் அதை
காணவரும் பக்தர் மனம் அவள் அருளாளே நிறைந்திருக்கும்
மத்தள மலையோரம் அலை பேசும் அங்கே அழகாய் வடிவேலிருக்கும் இதை கண்டால் உங்கள் கண்களும் காதலுறும்

வெருகலாற்றின் கரையோரம் வேல மரங்கள் பூத்திருக்கும்
அப்பனுக்கு மேலானவனின் சித்திர வேலோ சிரித்திருக்கும்
அழகன் முருகன் அங்கே அமர்ந்திருப்பான் ஏலவே
எங்கள் இதயங்களை அவன் பறித்திருப்பான் தன் காதல் கதையாலே

திருமங்களேஸ்வரன் திருவருளால் திருமங்கலாய் பதியெங்கும் இனப்பரளோ இடை விடாமல் நிறைந்திருக்கும் ஆதியாய் ஐயன்
அங்கே வீற்றிருக்கும் எழில் கோலம் நம்தனை நயமுற செய்திருக்கும்

கங்கை வேலியாகி காவலிரும் கரசையூரில் முல்லை நிலத்து
பொட்டல் வெளிகள் நடுவிருந்து தமிழ் குறிப்பெடுத்த குறுமுனிக்கு
மணக்கோலம் காட்டி மகிழ்வித்த மஹாதேவன் நெல்விளை நிலம்தன்னில் செல்வப்பெருக்கோடு
எங்கள் நினைவுகள் எல்லாவற்றிலும் நிறைந்திருப்பான்

அல்லிப்பூவெல்லாம் நீல நிறத்தில் பூத்திருக்கும்
அவள் புன்னகையோ எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும்
சூழ்ந்திருக்கும் குடியெல்லாம் இவள் திருவருளால் செழித்திருக்கும்
செந்தாமரை போல சிவந்த பத்தினியோ நேர்த்தி பிரியை ஆகி நீலாப்பளையுறைந்திருப்பாள்

மல்லிகையூர் வெளிகளே நெற்கதிர்கள் அசைந்தாட
பொற்கோலம் கொண்ட பொன்னார்மேனியனோ
அசையாச்சொத்துகளோடு குடிகளின் கூட்டம் நடுவே
அருள் பாளித்திருப்பார் .

இத்தனையும் சேர்ந்துங்கு வளமாய் நலமாய் கொட்டியார வெளியெல்லாம் செழித்திருக்கும் செந்நெல் விளைந்திருக்கும் எங்களின் தென் திருமலை தேசமிதில் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram