நீத்தார் கடன்

நீத்தார் கடன்கள் இயற்றும் முறையும்,
அதன் பலன்களும்,
*************************************************************

நீத்தார்களுக்குச் செய்யவேண்டிய கடன்களையும், அதனால்
விளையும் பயன்களையும் பற்றி காஞ்சி மஹா பெரியவர் ஸ்வாமிகள் தெளிவாகவும் விரிவாகவும் கூறியுள்ளார். அவரது அருளுரையிலிருந்து முக்கிய
பகுதிகளை தொகுத்து இன்று சித்தர்களின் குரலில் விரிவாக பகிர்கிறேன்..

ஐவகை யக்ஞங்கள்:-
————————————-

இவ்வுலகில் செய்யப்பட்டுவரும் ‘யக்ஞங்கள்’ பலவகைப்படுவனவாகும். இவை பல்வேறு விதமான காரண காரியங்களுக்க்கு செய்யப்படுகின்றன. இந்த யக்ஞங்களில் எல்லாவற்றையும் விட சிறந்தவை என ஐந்து வகை யக்ஞங்களை சான்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அவை பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம் புருஷ யக்ஞம் என்பவைகளேயாகும். இதில் பிதுர் யக்ஞம் எனக் குறிப்பிடப்படுவது இறந்து போன தம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியதாகும். இக்கர்ம பலன்களை முறையாகச் செய்யும் பொழுது வேத மந்திரங்களைச் சொல்லி அருக்கியம் விட வேண்டும். அதாவது மந்திர நீர் இறைக்க வேண்டும். அக்கினிக்கும் காக்கைக்கும் பிண்டம் வழங்குவது முதலான செயல்கள் அனைத்தும் இதில் அடங்கும். இக் காரியம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் பிதுர் கடன்களை யக்ஞம் என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உடலைத் தகனம் செய்த பிறகும் அதன் ஆத்ம சொரூபம் எஞ்சியிருக்கின்றது. தேகத்தை சுட்டெரிக்கின்ற போது அக்கினி தேவதையிடத்து சமர்ப்பிக்கின்ற பிராத்தனை ஒன்று ரிக்வேதத்தில் இருக்கின்றது. அக்கினி தேவதையே! உமது கரங்களில் இனிது பற்றி இவரை அழைத்துச் செல்வீராக! இவருக்கு தோஷமற்ற தேகத்தை நல்குவீராக! பித்ரு தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு இவரை அழைத்துச் செல்லும். சோகமும் மரணமும் இல்லா அவ்வுலகில் இவரைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். என்பதே அது. இது போன்ற பிராத்தனைகளை எல்லா மதங்களிலும் காண முடியும். இறந்து போனவர்களுக்கு ஆண்டு தோறும் சிரார்த்தம் செய்வது மிகவும் அவசியம். நாம் செய்யும் கர்மாவினால் நம் முன்னோர்கள் சந்தோசப்படுகின்றனர். நம்பிக்கையுடனும் மிக்க ஆதரவுடனும் ஆசாரத்துடனும் பித்ருக்களுக்கு அன்னமளிக்க வேண்டும். அதனால் தான் அன்னசிரார்த்தம் சிறந்ததாகின்றது. ஒரு குடும்பத்திற்கு பித்ருக்களின் சாபம் ஏற்பட்டால் அவர்களின் சந்ததிகளுக்கு பலவித இன்னல்கள் ஏற்படும் இது போன்ற பல விஷயங்களை ஸ்ரீமத்ஸய புராணத்தில் விரிவாக காணலாம்.

பித்ருக்கள் வரும் காலம் :-
——————————————–

புரட்டாதி மாதத்தில் தேய்பிறை நாட்களில் மகாளய தினத்தில் பிதுர்கள் பிதுர்லோகங்களில் இருந்தும் நரகம் சேர்ந்தவர்கள் நரகலோகத்தில் இருந்தும் விடுதலை பெற்று வந்து ஐப்பசி மாதம் தேய்பிறை நாட்கள் வரை நிலவுலகில் தங்கி இருந்து தம் சுற்றத்தார்கள் கொடுக்கும் பிண்டம், தர்ப்பணம் ஆகியவைகளைப் பெற்று மகிழ்கின்றார். இவைகளைப் பெற்றுக்கொண்ட பின்பே தம்தம் உலகங்களுக்கு மகிழ்ச்சியுடன் செல்கின்றார்கள். தீபாவளி – நரக சதுர்த்தசியன்று – சுற்றத்தார்கள் கொள்ளியைக் கையில் கொண்டு இருப்பது பிதுர்களுக்கு வழிகாட்டவே என்ற நம்பிக்கையும் இங்கு உண்டு. அன்று எமதர்ப்பணம் எமதீபதானம் என்னும் சடங்குகளையும் செய்வது வழக்கம்.

அமாவாசையின் அவசியம்:-
————————————————-

பிரதி மாதத்திற்கு ஒரு முறை பிதுர்க்களுக்கும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தேவர்களுக்கும் தினந்தோறும் மனிதர்களுக்கும் பசி எடுக்குமாம். அமாவாஸ்யா என்றால் அருகே வசிப்பது என்று பொருள்படும். சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்து இருக்கும் நாளையே ‘அமாவாஸ்யை’ என்று கூறுகின்றோம். இது பித்ருக்களுக்கு உகந்த நாளாகும். சந்திரனது கிரணத்தால் மகிழ்ச்சியுறும் பிதுர்கள் அமாவாஸ்யை அன்று அம்ருத கிரணம் இல்லாததால் மிக்க வருத்தத்துடனும் பசியுடனும் தம் புத்திரர்களை நோக்கி வருகிறார்கள். ஆகவே அன்று பிதுர்களைத் திருப்தி செய்வதற்கு ஒவ்வொருவரும் தர்ப்பணம் முதலான சடங்குகளை முறையாகத் தவறாது செய்ய வேண்டும். அப்படி செய்யா விடின் பித்ருக்களின் சாபம் ஏற்பட்டு சந்ததி செல்வம் ஆயுள் முதலியவைகள் குறைந்து போகும் நசிந்தும் போகலாம்.

எள் இறைக்கும் காரணம்:-
———————————————-

அமாவாஸ்யை அன்று செய்யப்படும் தர்ப்பணத்திற்குப் பயன்படுத்தப்படும் கறுப்பு எள்ளும் தர்ப்பையும் மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து உண்டாவதாக ஐதிகம். எள்ளும் தர்ப்பையும் இப்படி இறைவனது உடலில் இருந்து உண்டானவைகள் ஆதலால் மனதை ஒருமுகப்படுத்தி அலைபாய விடாமல் நிறுத்தி வைக்கும் ஆற்றலைப் பெற்றுத் திகழ்கின்றன. இந்தக் காரணத்தாலேயே (தர்ப்பையும் எள்ளும் சிரார்த்த காலத்தில் பிராமணர்கள் உட்காருமிடத்திலும் சிரார்த்தம் செய்யுமிடத்திலும் இறைக்கப்படுகின்றது) பித்ரு காரியங்கள் செய்யும் போது நாம் ஆராதித்து தர்ப்பணம் வழங்கும் பொருட்களை மூன்று தலைமுறையில் உள்ள பித்ரு வர்க்கங்களில் நமக்கு முந்திய தலைமுறையினர் விசுவினிடத்திலும் அவர்களுக்கு முந்திய தலைமுறையினர் ருத்திரர்களிடத்திலும் அதற்கு முந்திய தலைமுறையினர் ஆதித்யர்களிடத்திலும் உள்ளுறை பொருளாக நின்று பெற்றுக் கொண்டு அந்தந்த தேவதைகளின் அனுக்கிரகத்தையும் நமக்குப் பெற்றுத் தருகிறார்கள்.

மஹாளய பட்சத்தின் முக்கியத்துவம்:-
——————————————————————-

மற்றக் காலங்களில் செய்யும் தர்ப்பணங்களை விட மஹாளய பட்சத்தில் செய்யும் சிரார்த்தம் விஷேட பலனை அளிக்கும் தன்மை வாய்ந்தது. ஏனென்றால் மகாளய பட்சத்தில் செய்யும் ஆராதனை கூரியனுக்குப் பரிபூரண திருப்தி தருகின்றது. அதனால் சகலவித பித்ருக்கள் திருப்தி அடைகின்றார்கள். இந்த மகாளய காலத்தில் மகான்களாக பித்ருக்கள் இப்பூமிக்கு வந்து பதினாறு நாட்கள் தங்கியிருந்து தம் புத்திரர்கள் சுற்றத்தார்களுக்கு வேண்டிய நல்ல காரியங்களைச் செய்து கொடுக்கின்றார்கள். கூரியன் கன்யா ராசியில் புகும் போது ஆசாடம் முதலான ஐந்தாவது அபரபட்சத்தில் யமதர்மராஜன் பித்ருக்களைப் பூமிக்குச் செல்லும்படி அனுமதித்து அனுப்பி வைக்கின்றார். ஆகவே அந்த சமயம் முன்னோர்கள் நம்மை நாடி வருகின்றார்கள். கன்னியும் கூரியனும் சேர்கின்ற புரட்டாதி மாதமே இந்தக் காலமாகும். இந்த சமயத்தில் நம்மை நாடி வருகின்ற பிதுர்களுக்கு மகாளயசிரார்த்தம் செய்வது மிகவும் விஷேடமாகும். அமாவாஸ்யை வரையில் பித்ருக்கள் சிரார்த்தத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கு விதிப்படி ஹோமம் செய்து அன்னதானம் அளிக்க வேண்டும். இயலாத நிலையில் பிராமணர்களை அழைத்து தட்சணையாவது கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் சமாராதனை போல இட்டும் செய்யலாம். ஹிரண்யமாகச் செய்தாலும் அன்னமிட்டுச் செய்வது தான். மிகவும் சிறந்தது. மகாளய பட்சம் தொடங்கிய சதுர்த்திக்கு மேல் தான் மகாளய சிரார்த்தம் செய்ய வேண்டும். தன் பித்ருகளுக்கு சிரார்த்தம் செய்கிறவனே மகாளய பிராம்மணராக உட்காரத் தகுதி படைத்தவர்கள் ஆவார். மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது மகாளய சிரார்த்தை அன்னரூபமாகச் செய்ய வேண்டும். சந்நியாசம் பெற்று சித்தியடைந்தவர்களுக்கு துவாதசியில் சிரார்த்தம் செய்ய வேண்டும். எவ்வளவு பரம ஏழையாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மகாளய பட்ச சிரார்த்தத்தை அவசியம் செய்யத்தான் வேண்டும். இந்த சமயத்தில் செய்யப்படும் சிரார்த்தம் புண்ணியஷேத்திரமான ‘கயாவில்’ செய்யப்படும் சிரார்த்தத்திற்கு சமமான பலனைக் கொடுக்கும். பித்ருகளுக்கு நாம் சிரார்த்தம் செய்தால் அதை உரிய தேவர்கள் கிரகித்து முறைப்படி பித்ருக்களிடம் நம் எண்ணத்தை சேர்க்கிறார்கள். நம் முன்னோர்கள் வருடம் முன்நூற்றறுபத்தைந்து நாட்களில் தொண்ணூற்றாறு நாட்களில் வரும் ஷண்ணவத சிரார்த்தங்கள் செய்வது மிகுந்த சிரஸ்ஸைதரும். அது முடியாமல் போனால் பன்னிரெண்டு அமாவாஸ்யைகளிலாவது செய்ய வேண்டும். அதுவும் இயலாமல் போனால் தை, ஆடி, புரட்டாதி மாதங்களில் வரும் மூன்று அமாவாசைகளில் ஆவது கண்டிப்பாக சிரார்த்தம் செய்ய வேண்டும். இதுவும் முடியாத ஏழைகள் மஹாயள பட்சத்தில் வரும் புரட்டாதி அமாவாசை அனடறாவது தவறாது செய்ய வேண்டும். ‘காலாம்ருதம்’ எனும் ஜோதிடக் கிரந்தம் மஹாயள பட்ஷத்தில் சிரார்த்தம் செய்வதினால் ஏற்படும் அபரிமிதமான பலன்களைப் பற்றி விரிவாக கூறுகின்றன.

எப்படி போகின்றது?
———————————–

நரகத்தில் இருப்பவர்களுக்குக் கூட சாத்திரப்பரோபகாரம் செய்ய வேண்டும். திவஷமும் தர்ப்பணமும் செய்கின்ற பொழுது, பூலோகத்திலோ வேறு எங்கோ எந்த ரூபத்திலோ இருக்கின்ற நம் மூதாதையர்களுக்கு அது சென்று சேமத்தை கொடுக்கின்றது. இங்கே நாம் கொடுக்கின்ற எள், தண்ணீர் பிண்டம் முதலானவைகளைப் பித்ரு தேவதைகள் நம் மூதாதையர்கள் எங்கே எந்த ரூபத்தில் இருந்தாலும் அதற்கேற்ற ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்து விடுவார்கள். நம் நாட்டு ரூபாவை வெளிநாட்டு கரன்சியாக மாற்ற எக்ஸ் சேஞ்ச் பாங்க் இருப்பது போல பித்ரு தேவதைகள் இப்படிடி நாம் அளிப்பவற்றை ஏற்று மாற்றி உரியவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள். இந்தத் தேச ஆசாரம் சனங்களின் ரத்தத்தில் அடியோடு வற்றிப் போய் விடாததால் தான் இன்னமும் அநேகமாக எல்லோரும் ரொம்பச் சுருக்கமாகவாவது பித்ரு காரியங்கள், திவஷம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்து வருகிறார்கள். ஆனால் அவை செய்யப்படும் போது நமக்கு இருக்க வேண்டிய சிரத்தை தான் போய் விட்டது. பித்ரு காரியங்களுக்கு சிரார்த்தம் என்று பெயர் வைத்து இருப்பதே அதற்கு சிரத்தை முக்கியம் என்பதால் தான். சிரத்தை இருந்தால் தற்போது பலரும் பண்ணுவது போல சுருக்கமாகவும் அதைக்குறுக்கியும் சிரார்த்த காலம் தப்பியும் பண்ணுவது போல அல்லாமல் படுதோக்தமாக புஷ்களமாக அக்காரியம் நடக்கும். அப்படிச் செய்வதால் உண்டாகும் பலனும் பிரத்தியட்சமாகத் தெரியும். அதனால் என்ன பலன் விளையும் என்றா நினைக்கிறீர்கள்? சொல்கிறேன். இப்பொழுது பெரும்பாலானோர் ஏதோ ஒப்புக்குத் தான் பித்ரு காரியங்களைப் பண்ணுகிறார்கள். பாக்கியுள்ள மக்களோ மேலுந் துணிந்து இது ஒரு ஸீப்பர் ஸ்டிஷன் என்று கூறி இவற்றை அடியோடு நிறுத்தியும் விட்டார்கள். இதனால் விளையும் விபரீதப் பலன்கள் பல எனக்குத் தெரியும்.

சிரார்த்தம் செய்யாததால் ஏற்படும் கஷ்டங்கள்:-
——————————————————————————————

அநேக வீடுகளில் சித்தப்ரம்மம், அபஸ்மாரம், காக்காய் வலிப்பு என்று இன்னும் சென்ற தலைமுறைகளில் யாரும் கேள்வியே பட்டிராத அநேக விதமான இரத்த சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுடன் அநேகர் நெடுங்காலமாக அவஸ்தைப்பட்டுக்கொண்டு ஜோஸியர், ஆருடக்காரர்கள், மாந்திரீகர் என்று எல்லோரிடமும் போய் விட்டு என்னிடம் இறுதியில் வருகின்றார்கள். இந்தக் கஷ்டங்களுக்கு எல்லாம் பெரும்பாலும் காரணம் பித்ரு காரியங்களை முறையாகச் செய்யாமல் விட்டுவிட்டது தான். மாதா பிதாக்கள் இருக்கும் போது செய்வது மக்களைக் காக்கும். என்று இருப்பது போல மாதா பிதாக்கள் உயிர் போன பின் அவர்களுக்குச் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்யாமல் இருப்பதும்’ மக்களைத் தாக்கும். என்பது உண்மை ஆகும். நம்முடைய அப்பாவும் அம்மாவும் மற்றும் நம் வம்சத்தில் தோன்றிய முன்னோர்களும் எங்கேயாவது தம் பிள்ளைகளைக் கோபித்துக்கொண்டு சபிப்பார்களா? என்று கேட்கலாம்? பித்ருக்கள் சபிக்காமல் இருக்கலாம். ஆனால் பித்ரு தேவதைகள் இருக்கிறார்களே அவர்கள் இந்தப் பின் தலைமுறையினர் தங்கள் மூலமாக முன்னோர்களுக்கு எள்ளோ தண்ணீரோ அன்னமோ அளிக்கவில்லையே என்பதைப் பார்த்து சபித்து விடுவார்கள். ஆனபடியால் நாமும் நம் சந்ததிகளும் நன்றாய் இருக்கவே முன் தலைமுறையினருக்கு திவஸ, தர்ப்பணாதிபதிகள் பண்ணி வர வேண்டியது அவசியமாகும். அதாவது இங்கே பரோபகாரத்தோடு, ஸ்வாயn உபகாரமும் சேருகின்றது. செத்துப் போன உடனேயே எல்லோரும் மறுபடியும் வந்து பிறந்து விடுவது இல்லை. நன்றாகவே வேலை செய்தால் ‘இன்க்ரிமென்ட்’ மட்டும் அல்லாமல் போனஸ{ம் தருகிறார்கள் அல்லவா? ரொம்பவும் நன்றாகப் பணி புரிந்தாலோ ப்ரமோஷன் கொடுத்து மேலே தூக்கி விடுகிறார்கள். வேலையில் தப்புச் செய்தாலோ இன்க்ரிமென்டை நிறுத்தி விடுகிறார்கள். இதே போல புண்ணியம் பண்ணினவர்களுக்கு இன்கிரிமென்ட் மாதிரி இந்தப் பூலோகத்திலே சௌக்கியமான இன்னொரு ஜென்மம் கிடைக்கின்றது. ஸ்வர்க்கலோகம் (வாஸம்) தான் போனஸ் ஆகும். ரொம்பவும் புண்ணியம் செய்திருந்தால் ஸ்வர்க்கலோகத்திற்கு நிரந்தரப் புரமோஷன் கிடைக்கும். இப்படியே பாவம் செய்தவர்கள் முதலில் பெனால்டியாக நரகலோகத்தில் வசிக்க வேண்டும். அப்புறம் இங்க்ரிமென்ட் இல்லாத காரணத்தால் பூலோகத்தில் கஷ்டமான சூழ்நிலையில் பிறக்க வேண்டும். ரொம்பவும் கஷ்டமான சூழ்நிலையில் பிறக்க வேண்டும். ரொம்பவும் பாவம் பண்ணியிருந்தால் நிரந்தர நரகலோக வாயவஸம் அனுபவிக்க வேண்டிவரும்.

எள்ளும் தண்ணீரும் எங்கே போகின்றன?
———————————————————————————————–

முன்னோர்களுக்காக முறைப்படி தர்ப்பணம் செய்து வாழைக்காய் அரிசி எள் ஆகியவற்றையோ அல்லது சாப்பாட்டையோ நம் கண்முன்னால் ஒருவருக்கு அளிக்கின்றோம். அதைப் பெற்றுக் கொண்ட அவர் அதைக் கொண்டு சென்று சமைத்தோ அல்லது அப்படியே சாப்பிட்டோ அனுபவித்து விடுகின்றார். இது இப்படி நடைமுறையில் இருக்க இங்கே உள்ள இந்தப் பொருட்கள் எல்லாம் நம் பித்ருக்களுக்கு போய்ச்சேருவதாக எப்படி ஏற்றுக் கொள்வது? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். அந்தச் சந்தேகத்திற்கு தகுந்த முறையில் விளக்கமளிக்கின்றேன்.

ஒருவர் தனது மகனைப் படிக்க வைப்பதற்காக பட்டணத்துக்கு அனுப்பியிருந்தார். அவன் சிறிது காலம் சென்றதும் பரீட்சைக்கு பணம் கட்ட வேண்டியிருந்தால் தன் அப்பாவுக்குத் தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று கடிதம் எழுதினான். அப்பாவுக்கு தந்தியும் மணியாடரும் வேறு என்று தெரியும். பிள்ளையோ தந்தி மணியாடர் அனுப்பும்படி சொல்லியிருக்கிறானே என்று தபால் ஆபீசுக்குச் சென்றார். அங்கு சென்று அனுப்பவேண்டிய அளவு தொகையைக் கொடுத்து தந்தி மணியாடர் செய்யவேண்டும் என்றார். தபாலாபீஸ்குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணி கம்பியில் கட்டி அனுப்பிவிடுவார். அது தம் மகனுக்கு அப்படியே போய்ச் சேர்ந்துவிடும் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் அந்தக் குமாஸ்தாவோ அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீதை மட்டும் திருப்பி அவரிடம் கொடுத்து விட்டு சரி உம்முடைய பணம் போய்ச் சேர்ந்துவிடும் ரசீது பெற்றுக்கொண்டு செல்லுங்கள் என்றார். குமாஸ்தா பணத்தைப் பெற்றுக் கொண்டதையும் அதை அனுப்பாமல் அங்கேயே இருப்பதையும் பார்த்த அவர் ஐயா என்னுடைய பணம் அங்கே தானே இருக்கிறது. அதை நீர் தந்தியுடன் சேர்த்து அனுப்பவில்லையே? என்று கேட்டார். அதற்கு குமாஸ்தா கவலைப்படாதீர்கள். பணம் போய்ச் சேர்ந்து விடும். என்று கூறிவிட்டு தொடர்ந்து கட் கடகட கட் என்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட் லொட் என்று தட்டுகிறார். பணமும் இங்கேயே இருக்கிறது. அது எப்படி அங்கே போய்ச் சேரும் எண்றெண்ணியபடி அவநம்பிக்கையுடன் அவர் வெளியே சென்றார். ஆனாலும் பணம் சரியான முறையில் சரியான வேளையில் போய்ச் சேர்ந்து விட்டது.

தர்ப்பணம், திவஷம் முதலியன நாம் பண்ணுவது அது மாதிரித்தான். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்குரிய சட்டப்படி கொடுத்தால் அது போய்ச்சேர்ந்துவிடும். சாஸ்திரம் என்ற சட்டப்படி நாம் தர்ப்பணம்இடும் போது அப்பொருட்களைப் பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சென்று சேர்த்து விடுவார்கள். அத்தேவதைகளுக்குப் பரமேஸ்வரன் இப்படி உத்தரவு பண்ணி அதற்கான சக்தியையும் கொடுத்து இருக்கிறான். அது மட்டுமல்ல! வெளிநாட்டில் கொடுக்கப்பட வேண்டியப வுன் அல்லது டொலரை நாம் இங்கே கொடுக்க முடியாது. அதே போல சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள் வாழைக்காய் ஆகியவற்றை இங்கே தந்தால் பித்ருக்கள் இருக்குமிடத்தில் அது அவர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.

கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள்:-
—————————————————————————————-

மேலும் சிரார்த்தம் செய்த பிறகு மிஞ்சிப்போன உணவை நாய்க்குப் போடக் கூடாது. பசுவை நாடிப்போய் அதற்குத்தான் அளிக்க வேண்டும். சிரார்த்தத்தின் போது நம்மைவிட மேலான நிலையில் உள்ள பித்ருக்களுக்கு உணவளிக்கின்றோம். அவற்றைக் காக்கைக்குப் பிண்டமாக வைத்துச் சமர்ப்பிக்கின்றோம்.

சிரார்த்தத்திற்கு வந்து பங்குபெற்றவர்கள் சாப்பிட்ட மிகுதியை பசுவிற்குப் போடலாம். பசு பூசைக்குரியது. கோமாதா என்று போற்றப்படுவது. அப்படி பசுவுக்குப் போட முடியாத போது மிச்சத்தை மண்ணில் குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும். அது தான் முறை. சாதாரணமாக உள்ள நாம் சாப்பிட்டு மிச்சமாகும் உணவை மட்டும் நாம் நாய்க்குப் போடலாம். இதில் தவறில்லை. சிரார்த்த தினத்தன்று உணவில் கத்தரிக்காய், வெங்காயம் முதலியவைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ருத்ராட்சம், துளசி, வில்வம், சந்தனம் போன்றவைகள் அகத்தூய்மையுடன் பக்தி நிறைந்த உள்ளத்துடன் பூஜையில் ஈடுபடுவதற்கு தூண்டுபவை. இவற்றில் சிராண சக்தி நிறைந்திருப்பதே அதற்குக் காரணம். ஆகவே இவைகளுடன் ஒத்துப் போகக் கூடிய வெள்ளரிக்காய், இஞ்சி, மிளகு, போன்றவைகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிரார்த்த காரியங்களைச் செய்யும் போது நமது உடலிலும் மனதிலும் நல்ல சக்திகள் மேலோங்கி நிற்க வேண்டும். அதற்காகவே இவ்வுலகில் கத்தரிக்காய், வெங்காயம் முதலியவைகளைச் சேர்ப்பது இல்லை.

சிரார்த்த தினத்தில் செய்யத்தக்கவைகள்.
—————————————————————————————————-

சிரார்த்த தினத்தில் திருக்கோயிலிலே கடவுளுக்கு தன்னாலியன்ற வரை அபிஷேகம் பூசை திருவிளக்கேற்றுதல் முதலியவைகளைச் செய்தல் வேண்டும்.

“யாவர்க்குமாம் பசுவிற்கொருவாயுறை”

என்னும் திருவாக்கைக் கடைப்பிடித்து பசுக்களுக்குப் புல்லுப் போடுதல் வேண்டும்.

செய்யத்தகாத கருமங்கள்:-
————————————————

நெற்குத்தல், பிச்சையிடுதல், தயிர் கடைதல், நெய் முதலிய பொருட்களை வாங்குதல், கொடுத்தல் முதலியன சிரார்த்தம் நடக்கும் தினத்திலே செய்யத்தகாத கருமங்களாகும். சிராத்த கர்த்தா சிரார்த்தத்திற்கு மறு நாளும் ஷேளரஞ் செய்து கொள்ளுதல், பாரஞ் சுமத்தல், எண்ணை தேய்த்துக் கொள்ளுதல், இரண்டாம் முறையும் புசித்தல், காமமடைதல் முதலியவற்றை தவிர்த்து விரத சீலனாய் இருத்தல் வேண்டும்.

சிரார்த்தத்திலே கண்ணீர் விடுதலும் கோபித்தலும் துரிதஞ் செய்தலும் பொய் சொல்லுதலும் சிந்திய அன்னத்தை காலால் மிதித்தலும் இலையிலே அன்னத்தை தூவிப் பரிமாறலும் ஆகாவாம். கண்ணீருடன் செய்யின் பிரேதசன்மங்களையும் கோபத்துடன் செய்யின் சத்துருக்களையும் பொய் சொல்லிச் செய்யின் நாய்களையும் அன்னத்தை மிதித்துச் செய்யின் இராக்கதர்களையும் தூவிப் பரிமாறின் பாவிகளையும் அச்சிராத்த பலன் அடைகின்றது.

பாகஞ் செய்பவர்கள்:-
————————————–

சிவதீட்சை பெறாதவர்களும் நித்திய கன்மம் விடுத்தவர்களும் சுசியற்றவர்களும் சிரார்த்தத்திற்கு உபயோகமானவைகளைச் சிரார்த்தம் நிறைவேறுவதற்கு முன் புசிக்க நினைப்பவர்களும் பாகஞ் செய்யும் பொழுது வெற்றிலை பாக்குண்டல் முதலிய குற்றமுள்ளவர்களுமாகிய இவர்களால் சமைக்கப்பட்ட அன்னமுதலியவை பிதிரர்களுக்குப் பிரீதியாகா. அவை இராக்கதர்களுக்கே பிரீதியாம்.

சிரார்த்தத்திற்குரிய திரவியங்கள்:-
————————————————————–

சிரார்த்தத்துக்குரிய திரவியங்கள்:- எள்ளு, நெல்லரிசி, கோதுமை, சிறு பயறு, உழுந்து, சர்க்கரை, தேன், பசு நெய், பசுப்பால், பசுத்தயிர், எண்ணெய், சிகைக்காய், உப்பு, புளி, மிளகு, சீரகம், மஞ்சள், கடுகு, இஞ்சிக் கிழங்கு, வாழையிலை, வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், மாங்காய், மாம்பழம், பலாக்காய், பலாப்பழம், தேங்காய், இளநீர், புடலங்காய், அவரைக்காய், பாகற்காய், எலுமிச்சம்பழம், நெல்லிக்காய், சிறு கிழங்கு, வள்ளிக்கிழங்கு, கீரை, முல்லையிலை, முசுட்டையிலை, காரையிலை, பிரண்டை, கருவேப்பிலை, வெற்றிலை, பாக்கு, ஏலம், சுக்கு, கராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி முதலியனவாம்.

ஆகாத திரவியங்கள்:-
—————————————

சிரார்த்தத்திற்கு விலக்கப்பட்ட திரவியங்கள்:- கடலை, பீர்க்கங்காய், நீற்றுப்பூசனிக்காய், சுரைக்காய், கத்தரிக்காய், அத்திக்காய், முருங்கைக்காய், வாழைப்பூ, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கொவ்வை, எருமைப்பால், எருமைத் தயிர், எருமை நெய், ஆட்டுப்பால், ஆட்டுத் தயிர் முதலியனவாம்.

பத்திர புஷ்பங்கள்:-
———————————-

சிரார்த்தத்துக்குரிய பத்திர புஷ்பங்கள்:- துளசி, வில்வம், தாமரை, சண்பகம், அறுகு, புன்னை, நந்தியாவர்த்தை, எட்பூ, மருக்கொழுந்து, வெட்டி வேர் முதலியன.

சிரார்த்தத்துக்கு உபயோகமாகாத பத்திர புஷ்பங்கள்:- மகிழம்பூ, தாழம்பூ, அலரிப்பூ, சிறுசண்பகப்பூ, முதலியன. இவற்றுக்குப் பிரமாணம் காரணம் முதலிய ஆகமங்களிலும் அகோரசிவாச்சார்யபத்ததி வியாக்கியானத்திலும் மிருதுகளிலுங் காண்க.

ஆசௌசம்வரின் செய்யும் விதி:-
———————————————————

சனனாசௌச மரணா சௌசத்திலே சிரார்த்தம் வந்தால் ஆசௌசந்விர்;த்தியாகுந் தினத்திலே சிரார்த்தம் செய்தல் வேண்டும். விதவை தான் வீட்டுக்கு விலக்காகியிருக்கும் போது தன் கணவனுடைய சிரார்த்த தினம் வந்தால் ஐந்தாம் நாள் சிராந்த்தஞ் செய்யக் கடவர். சிரார்த்தத்திற்குப் பாகஞ் செய்யத் தொடங்கிய பின் ஆசௌசம் வரின் அச்சிரார்த்தம் முடியும் வரை அது கர்த்தாவைப் பற்றாது.

செய்யும் விதி:-
————————–

ஒருவரின் இறந்த மாதந் தெரியாது தினம் மாத்திரம் தெரிந்தால் ஆடி, மாசி, மார்கழி, புரட்டாதி என்னும் மாதங்களுள் ஒன்றில் வரும் அத்தினத்தில் சிரார்த்தம் செய்க. இறந்த நாள் தெரியாது மாதந் தெரிந்தால் அம்மாதத்து அமாவாசையில் செய்க. ழூஅல்லது கிருஷ்ண பட்ஷ அட்டமியில் செய்க. பட்ஷம் தெரியாதாயின் கிருஷ்ண பட்ஷத்தில் செய்க. மரித்த மாதம் பட்ஷம் திதி இவற்றுள் ஒன்றுந் தெரியாதாயின் மரித்ததாகக் கேள்விப் பட்ட மாதத்து அமாவாசையில் செய்க. தாய் தகப்பன் இருவருக்கும் ஒரே நாளில் சிரார்த்தம் வந்தால் ஒன்றாகப் பாகஞ் செய்து இரு சிரார்த்தங்களையும் செய்க. இவ்வாறு காலாதர்சம் முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது.

சற்பாத்திரர்:-
———————–

சிரார்த்தம் முதலிய தானங்களை அசற்பாத்திரருக்குக் கொடுத்தல் கூடாது. பதிசாத்திரங்களை யோதி அதன் பொருளை அறிந்து பாவங்களை விலக்கித் தருமங்களை அனுட்டித்துக் கடவுளை மெய்யன்போடு வழிபடுவோரும் தம்மைப்போல பிறரும் பரகதி பெற்று உய்ய வேண்டுமென்று கருதி அவருக்கு நன்நெறியைப் ஆபாதிப்பவருமாய் உள்ளவர். சற்பாத்திரர் எனப்படுவர். பாவமாகிய கடலில் அமிழ்ந்தினோர். திர – சிவபெருமான் திருவடி மலராகிய கரையிலிருத்துவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram