யாவருக்கும் குடிநீர் -2025 சனாதிபதியின் திட்டம்.

2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி வழங்கிட உறுதி பூண்டுள்ளேன்!
மக்களுக்கான நீர் வழங்கும் திட்டங்கள் உயர் தரத்துடன்; வீதிகளை நிர்மாணித்தல், இனி நீர்வழங்கல் அமைச்சுடன் ஒன்றிணைந்து.
2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னெடுப்புக்கள் தொடர்பாக நாம் கவனத்தை செலுத்தியுள்ளோம்.
ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதேசங்களை சுத்தம் செய்து புனர்நிர்மாணம் செய்வதற்கு விசேட கவனத்தை செலுத்தி, இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதுவது அவசியமாக உள்ளது.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவற்றை நான் குறிப்பிட்டேன்.
“அனைவருக்கும் நீர்” என்பது எமது சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதியாகும்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் 47 இலட்சம் குடும்பங்களுக்கு நீரை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளின் மூலம் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதோடு, அதற்காக 40,000 கிலோ மீற்றர்கள் நீர் குழாய்கள் புதிதாக பதிக்கப்படவுள்ளன.
இதுவரை நீர்வழங்கலுக்கு செலவிடப்பட்ட செலவினங்களில் அரைவாசி நிதியை பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
நீரோடைகள், நீரூற்றுக்களை இனங்காணல் மற்றும் அவற்றை அபிவிருத்தி செய்தல் இவ்வேலைத்திட்டத்தின் படிமுறைகளாகும்.
நீரூற்றுக்களை பாதுகாப்பதற்காக மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் முழு நீர் வழங்கலில் 45% நீர்க் கசிவின் மூலம் வீணாக்கப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களில் புதிதாக நீர்க்குழாய்களை பொருத்துவதன் மூலம் அதனை 15% வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது.
நீரை பாதுகாப்பதற்காக நீர்க் கசிவுள்ள இடங்களை இனங்கண்டு புதிதாக நீர்க்குழாய்களை பொருத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் நேற்று குறிப்பிட்டனர்.
பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் உயர் தரத்தில் சுத்திகரிக்கப்பட்டு வீடுகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாகவும் நேற்று ஆராயப்பட்டது.
நீர்க்குழாய்களை பொருத்தும்போது பாதைகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அதன் மூலம் தேசிய சொத்து அழிவடைவதை தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்வழங்கல் சபை ஒன்றிணைந்து அபிவிருத்தித்திட்டங்களை செயற்படுத்துவதற்கும் நேற்று இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கு அவசியமான செலவினத்தை 30% வரை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
மழை நீரை சேகரித்தல் மற்றும் நாட்டில் உள்ள குளங்கள், நீர்த் தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், புதிதாக குளங்கள் மற்றும் நீரை தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நீர்ப்பற்றாக்குறை உள்ள பிரதேசங்களுக்கு நீரை கொண்டு செல்வதற்கு புதிய கால்வாய்கள் மற்றும் குழாய்களை கொண்டமைந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் புதிய நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ, எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, அமைச்சு, இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருடன் பொது மக்கள் நீர் வழங்கல் செயற்திட்டத்தின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram